நாகை மாவட்டத்தில் 18-ந்தேதி 49 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்

நாகை மாவட்டத்தில் 18-ந்தேதி 49 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் 18-ந்தேதி 49 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்
Published on

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-


நாகை மாவட்டத்தில் 2018-19-ம் பருவத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும், முதற்கட்டமாக 49 நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் அறுவடை பணி நிறைவடையும் வரை தொடர்ந்து செயல்படும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை விலைக்கு வாங்கும் அரசு இதனை அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளில் மக்களுக்கு விலையில்லாமல் வழங்கி வருகிறது.

வறட்சி, வெள்ளம் போன்ற இடர்பாடு காலத்தில் நிவாரணம் வழங்குவதுடன், சம்பா, குறுவை சாகுபடி காலத்தில் தொகுப்பு திட்டத்தையும் தமிழக அரசு அளித்து வருகிறது. நடப்பாண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்துக்காக மாநில அரசின் பங்கு தொகையாக ரூ.632 கோடி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நெல்லுக்குரிய தொகை மின்னணு பணபரிவர்த்தன முறையில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு (பொறுப்பு), உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) சீனிவாசன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராசு, வெற்றிச்செல்வன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com