

நாகர்கோவில்,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரியும் சென்னையில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் குமரி மாவட்டத்திலும் தி.மு.க. சார்பில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகில் நேற்று பிற்பகலில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, வக்கீல் உதயகுமார், நிர்வாகிகள் தில்லைச்செல்வம், சேக்தாவூது, பசலியான், பெஞ்சமின், அழகம்மாள்தாஸ், மணிமாறன், நாஞ்சில் மணி, எம்.ஜே.ராஜன், ஜெசிந்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 69 பேரை கைது செய்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் வாகனங்களில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தால் வடசேரி பகுதியில் நேற்று சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்ததை கண்டித்து சுசீந்திரம் அருகே தெங்கம்புதூர் சந்திப்பில் ராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் 41 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் 41 பேரையும் கைது செய்து கொட்டாரம் அரசு பள்ளியில் தங்க வைத்தனர்.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணவாளக்குறிச்சி சந்திப்பில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குட்டிராஜன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் தலைமை கழக பேச்சாளர் செல்வகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மகாராஜபிள்ளை, செண்பகராமன்புதூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரம், மாணிக்கம், சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 26 பேரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையிலான தி.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் அழகியமண்டபம் சந்திப்பில், நாகர்கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைதொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு சாலையின் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.