நாகர்கோவில் அருகே பெண் கொலை: காயம் அடைந்த கணவரும் ஆஸ்பத்திரியில் சாவு சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்

நாகர்கோவில் அருகே வீடு புகுந்து பெண் கொலை செய்யப்பட்டார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அந்த பெண்ணின் கணவரும் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி அந்த பெண்ணின் அண்ணனே தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாகர்கோவில் அருகே பெண் கொலை: காயம் அடைந்த கணவரும் ஆஸ்பத்திரியில் சாவு சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
Published on

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 55), பூ வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுடைய மகள் ஆர்த்தி (15), தேரேகால்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு முத்து, கல்யாணி, ஆர்த்தி ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, 4 பேர் கும்பல் திபு, திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் கல்யாணியை சரமாரியாக வெட்டியது. இதை சற்றும் எதிர்பார்க்காத முத்துவும், அவருடைய மகள் ஆர்த்தியும் ஓடி வந்தனர். அவர்களையும் கும்பல் சுற்றி வளைத்து வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த முத்து, ஆர்த்தி ஆகியோரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு பரிதாபமாக இறந்தார். ஆர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவன்-மனைவி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக கல்யாணியின் அண்ணன் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் இதுபற்றிய விவரம் வருமாறு:-

கல்யாணியின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். இவர்களில் 4 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள். இவர்களில் ஒரு சகோதரி இறந்து விட்டார். கல்யாணியின் குடும்பத்தினருக்கு பூர்வீக சொத்தாக தோவாளையில் 4 ஏக்கர் நிலம் உள்ளது.

தற்போது இந்த பகுதியில் 4 வழிச்சாலை வந்துள்ளதால் இந்த சொத்தின் மதிப்பு பல கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், நான்கு வழி சாலைக்கு பூர்வீக சொத்தில் இருந்து இடம் கொடுக்கப்பட்டது. இதற்கான இழப்பீடு தொகையை சுடலையாண்டி பெற்றுள்ளார். ஆனால், அந்த இழப்பீடு தொகையில் கல்யாணிக்கு சேரவேண்டிய பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதுதொடர்பாக கல்யாணி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றப்பிரிவு போலீசார் சுடலையாண்டியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, சுடலையாண்டி பணத்தை உடனே கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்துள்ளார்.

கொலை நடந்த நேற்று முன்தினமும் கல்யாணி புகார் கொடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த சுடலையாண்டிக்கு கல்யாணி மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் கூலிப்படையை ஏவி கல்யாணி மற்றும் அவரது கணவர் முத்துவை தீர்த்துக் கட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவாக உள்ள சுடலையாண்டியையும், கூலிப்படையையும் பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் சாம்சன், அருளப்பன், மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்யாணியின் குடும்ப நிலத்தின் காவலாளியையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அருகே நடந்த இரட்டைக்கொலை அந்த பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com