

புதுச்சேரி
புதுவை கவர்னராக உள்ள கிரண்பெடி கடந்த 2 ஆண்டுகளில் புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டுள்ளார். மக்களுக்கு தொடர்பு இல்லாமல் இருந்த கவர்னர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றியுள்ளார். இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் கவர்னரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏதாவது குறைகள் என்றால் வாரந்தோறும் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று கவர்னர் ஆய்வு நடத்தி வருகிறார். அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அதை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவதை முதல்-அமைச்சர் நாராயணசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கவர்னர் உடனடியாக புதுவையைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். கிரண்பெடியை நாராயணசாமி கவர்னராக நியமிக்கவில்லை. ஜனாதிபதிதான் நியமித்தார். இந்த அரசு மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கவர்னருக்குத்தான் உள்ளது. ஆனால் முதல்-அமைச்சராக உள்ள நாராயணசாமிக்கு கவர்னரை ராஜினாமா செய்யுமாறு சொல்ல அதிகாரம் கிடையாது.
புதுச்சேரி மக்கள் தொடர்ந்து கிரண்பெடியே கவர்னராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஊழல், முறைகேடுகளை கவர்னர் தடுப்பதால் அவரை வெளியேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி துடிக்கிறார். காமராஜர் காலத்தில் காங்கிரசார் தங்களது சொத்துகளை நாட்டுக்கும், கட்சிக்கும் அளித்தனர்.
ஆனால் இன்றைய காங்கிரசார் அரசு சொத்துக்களையும், மக்கள் சொத்துக்களையும் அபகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது குயில்தோப்பை அபகரிக்க வந்துள்ளனர்.
மூட்டை முடிச்சுகளோடு வெளியேறுங்கள் என்று கவர்னரை பார்த்து நாராயணசாமி கூறியுள்ளார். தன்மானம் உள்ளவர்கள் கவர்னரின் விழாவுக்கு செல்லமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். உண்மையிலேயே தன்மானம் இருந்தால் நாராயணசாமியும், காங்கிரசாரும் இனி கவர்னர் மாளிகைக்கு செல்லாமல் இருக்கவேண்டும். புதுவை மக்கள் நம்பிக்கையை பெற்ற கவர்னர் கிரண்பெடி 3 ஆண்டு பணியை முடித்த பின்னரும் மேலும் 3 ஆண்டுகள் பணிநீட்டிப்பு செய்யவேண்டும் என மத்திய அரசை பாரதீய ஜனதா வலியுறுத்தும்.
இவ்வாறு சாமிநாதன் கூறினார்.