அவினாசி அருகே விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது பரிதாபம்

ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது அவினாசி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அவினாசி அருகே விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது பரிதாபம்
Published on

அவினாசி,

புதுச்சேரியில் உள்ள லிங்கா ரெட்டிபாளையத்தை சேர்ந்த முருகையன் மகன் ராகவன்(வயது 21). அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன்(20). இவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் 10 மாணவர்களுடன் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா செல்வது என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் 6 மோட்டார் சைக்கிள்களில் 12 பேர் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இதில் ராகவனும், வேல் முருகனும் ஒரே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

நேற்று காலை 6.30 மணி அளவில் அவினாசி பழங்கரை பைபாஸ் ரோட்டில் அவர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது மோட்டார் சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராகவனும், வேல்முருகனும் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்புக்கம்பியில் பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாகும்.

சுற்றுலா வந்த இடத்தில் நண்பர்கள் இருவரையும் பறிகொடுத்த மற்ற மாணவர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com