மேல்மலையனூர் அருகே, அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு- தீ வைப்பு - 12 பேர் கைது

மேல்மலையனூர் அருகே அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து, தீ வைத்து எரித்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேல்மலையனூர் அருகே, அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு- தீ வைப்பு - 12 பேர் கைது
Published on

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே தாமனூர் கிராமத்தில் வசித்து வந்த ஆதிதிராவிடர் கிறிஸ்தவ மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகன் சூசை, லூர்துசாமி மகன் ராயப்பன் ஆகியோருக்கு சொந்தமான 2 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது.

இதையடுத்து கடந்த 1998-ம் ஆண்டு நடந்த அரசு விழாவில் தாமனூர் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 37 பயனாளிகளுக்கு தலா 3 செண்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலையில் தங்களது நிலத்தை அரசு கையகப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு வழங்கியதற்கு சூசை, ராயப்பன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்காரணமாக பயனாளிகளுக்கும், சூசை, ராயப்பன் ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த நிலையில் அதே ஊரைச்சேர்ந்த பெரியநாயகி, கலாராணி, அன்னபூரணி, செலின்மேரி ஆகியோர் தங்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் வீடுகளை கட்டினர். இதனால் ஆத்திரமடைந்த ராயப்பன் மகன்கள் அமலதாஸ் (வயது 32), ஜோசப் (32), ஜான்பாப்தீஸ் (37) மற்றும் இவர்களது ஆதரவாளர்களான சென்னையை சேர்ந்த அஜித்குமார் (24), முருகேசன் (40), சபரிநாதன் (21), வெங்கடேசன் (43), ரமேஷ் (33), கிருஷ்ணகுமார் (21), பாண்டுரங்கன் (30), பிரகாஷ் (48), ஏழுமலை (35) ஆகியோர் நேற்று முன்தினம் ஒன்று சேர்ந்து பெரியநாயகி, கலாராணி, அன்னபூரணி ஆகியோர் கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றினர்.

மேலும் செலின்மேரி கட்டியிருந்த குடிசை வீடு மற்றும் கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் வளத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலதாஸ் உள்பட 12 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com