திருமானூர் அருகே, இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டி வரும் விவசாயி

திருமானூர் அருகே இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டி வருகிறார்.
திருமானூர் அருகே, இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டி வரும் விவசாயி
Published on

செந்துறை,

கடந்த 1990-களில் மத்திய அரசு கிராமங்கள் தன்னிரைவு பெற்று வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஜனதா திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சேனாபதி கிராமத்தில் அரசு மானியத்துடன் சாண எரிவாயு கட்டுமானம் அமைத்து கொள்ளலாம் என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதோடு அதற்கான ஒப்பந்ததாரர்களையும் பரிந்துரை செய்தனர். அதன்படி அனைவரும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாண எரிவாயு கட்டுமானத்தை செய்தனர். ஆனால் சேனாபதி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயியான மாதவன் அரசு வழங்கிய சாண எரிவாயு திட்டத்தை தனது சொந்த அறிவை பயன்படுத்தி சுட்ட செங்கற்கள் மற்றும் சிமெண்டு கலவைகளை மட்டுமே கொண்டு இயற்கை எரிவாயு திட்ட கட்டுமானத்தை செய்தார். ஆனால் இந்த முறையை ஏற்க பஞ்சாயத்து நிர்வாகம் மறுத்துவிட்டது.

இருப்பினும் அவரது சொந்த முயற்சியில் கட்டப்பட்ட இயற்கை எரிவாயு திட்டத்தை கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அதே பகுதியில் செயல் படுத்த பட்ட அனைத்து திட்டங்களும் காலப்போக்கில் செயல் இழந்து பயன்படுத்த முடியாமல் வீணாகியது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது எப்படி என்று மாதவன் கூறுகையில், சிமெண்டு தொட்டி 10 அடி ஆழம் 10 அடி அகலம் வட்ட வடிவில் செய்தேன். அருகருகே மாட்டு சாணக்கரைசலை உள் செலுத்தவும் வெளியேற்றவும் 5-க்கு 5 அளவில் 2 தொட்டிகள் அமைத்தேன். இந்த கட்டுமானத்திற்கு சுட்ட செங்கற்கள் மற்றும் சிமெண்டு மட்டுமே பயன் படுத்தினேன். இரும்பு கம்பி உள்ளிட்ட எதையும் பயன்படுத்த வில்லை. அதனால் எனது கட்டுமானம் 30 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இதனால் எனக்கு ரூ.8 லட்சம் சேமிக்க முடிந்தது. சாண எரிவாயு திட்டம் தோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் இரும்பு குழாய் வடிவில் வெல்டிங் செய்து தயாரிக்கப்பட்டது தான். நாளடைவில் இந்த இரும்பு தொட்டி துருபிடித்ததால் இந்த திட்டம் பலராலும் கைவிடப்பட்டது. எந்த நாளும் எங்கள் இல்லத்தில் எரிவாயு பயன்படுத்துவதில் எந்தவித ஆபத்து ஏற்பட்டதே இல்லை என்றார்.

இதுகுறித்து வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், அரசு கிராமம் தோறும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்தி அதனை சிலிண்டர்களில் அடைத்து வீட்டுக்கு வீடு வினியோகம் செய்யலாம். இதன் மூலம் படித்த மற்றும் படிப்பறிவற்ற மக்கள் பலருக்கும் மறைமுக மற்றும் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனை அரசு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இயற்கை விவசாயி சாந்தி கூறுகையில், 1,000 பேருக்கு சமையல் செய்ய ரூ.100 செலவு செய்தால் போதும் சாண எரிவாயு கிடைத்து விடும். அரசு முறையாக இந்த திட்டத்தை விரிவுபடுத்தினால் ரூ.100-க்கு ஒரு சிலிண்டர் சாண எரிவாயு தர முடியும். இந்த சாண எரிவாயுவில் எவ்வித வாடையும் வராது. ரசாயன உரம் பயன்படுத்தாத இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாத உணவு பொருட்களை தயாரித்து அனைவருக்கும் அளிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com