வந்தவாசி அருகே பட்டப்பகலில் 2 வியாபாரிகள் வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு - போலீஸ் விசாரணை

வந்தவாசி அருகே 2 கிராமங்களில் மளிகைக்கடை உரிமையாளர்களின் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, ரொக்கத்தை பட்டப்பகலில் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி அருகே பட்டப்பகலில் 2 வியாபாரிகள் வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு - போலீஸ் விசாரணை
Published on

வந்தவாசி,

வந்தவாசி அருகே உள்ள மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). மளிகை வியாபாரி. இவர் வந்தவாசி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்க வந்தவாசிக்கு சென்று இருந்தார். அப்போது கடையில் அவரது மனைவி கனகபுஷ்பா இருந்தார். பிற்பகல் 2 மணியளவில் கடையை பூட்டிய அவர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து அவர் அளித்த தகவலின்பேரில் கணவர் அடைக்கலம் வீட்டிற்கு வந்தார். உள்ளே சென்றபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.14ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பொன்னூர் போலீசாருடன் வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி சென்று பார்வையிட்டார். திருட்டு தொடர்பாக பொன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். வியாபாரி. இவர் அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்புற கதவு திறக்கப்பட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

இது பற்றி தகவல் அறிந்த தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் நடுக்குப்பம் கிராமத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மாம்பட்டு, நடுக்குப்பம் ஆகிய இடங்களில் 2 வியாபாரிகள் வீட்டிலும் பட்டப்பகலிலேயே மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 2 வீடுகளிலும் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க திருவண்ணாமலை தடயவியல் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜன் தலைமையில் குழுவினர் திருட்டு நடந்த வீடுகளின் பீரோக்களில் பதிவான திருடர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். அதன்படி தப்பி ஓடிய திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com