புன்னகைக்கும் புதிய தோட்டம்

சுவர் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களை செங்குத்தாக அடுக்கிவைத்து அதில் செடிகளை வளர்த்து பசுமை போர்த்திய அலங்காரமாகவே மாற்றியிருக்கிறார், ரோகித் மெக்ரா.
புன்னகைக்கும் புதிய தோட்டம்
Published on

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த இவர் வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். வீடு மட்டுமல்ல வேலை பார்க்கும் இடத்திலும் செங்குத்தாக செடிகள் வளர்க்கும் பாணியை பின்பற்றி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் கலந்துரையாடியும் அதுபோல் அவர்களை செடிகள் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறார்.

இவருடைய முயற்சியால் லூதியானா ரெயில் நிலையத்தில் செங்குத்தாக பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான பாட்டில்களை இதற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்காக ரெயில் நிலையத்தின் மேற்பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் பாட்டில்களில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நீர் செலுத்தப்படுகிறது. எனினும் ரெயில் நிலைய தரைத்தளத்தில் தண்ணீர் வழிந்துவிடாதபடி கட்டமைத்திருக்கிறார்கள். இப்படி செங்குத்தாக செடிகள் வளர்க்கப்படும் முதல் ரெயில்நிலையம் என்ற சிறப்பையும் லூதியானா ரெயில் நிலையம் பெற்றிருக்கிறது.

ரோகித்தின் தீவிர முயற்சியால் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டரை லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் செடிகள் வளர்க்கும் பாத்திரங்களாக மாறி இருக்கின்றன. இவருடைய மனைவி கீதாஞ்சலியும் செடிகள் வளர்ப்புக்கு உறுதுணையாக இருக்கிறார்.

செங்குத்து தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறோம். முதலில் வீட்டில் பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்க்க நாங்கள் நிறைய சிரமப்பட்டோம். பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடைப்பதிலும் பற்றாக்குறை ஏற்பட்டது.

நண்பர்கள், உறவினர்கள் பாட்டில்களை சேகரித்து கொடுத்து உதவினார்கள். பழைய பாட்டில்கள் சேகரிப்பவர்களிடம் இருந்து மொத்தமாக பாட்டில்களை வாங்கிய பிறகு செடிகள் வளர்ப்பது சுலபமானது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பதன் மூலம் அதனை பயனுள்ளதாக மாற்ற முடியும். சிறிய ரக செடிகளை வளர்ப்பதால் சுவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. வீட்டின் உள்புற வெப்பநிலையும் 5 செல்சியல் வரை குறையும். நாங்கள் 33 வகையான செடிகளை வளர்க்கிறோம் என்கிறார், ரோகித்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com