

ஊத்துக்கோட்டை,
சமையல் கியாஸ் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு புறப்பட்டது. டேங்கர் லாரியை நாமக்கல் அருகே உள்ள எருமைப்பட்டி கைகாட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தங்கதுரை(வயது 43) என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, சாலை ஓரமாக இருந்த வேப்ப மரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேப்ப மரம் இரண்டாக முறிந்தது.
பின்னர் டேங்கர் லாரி, அதன் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது லேசாக மோதியபடி நின்றது. மரத்தில் பயங்கரமாக மோதியதால் டேங்கர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் தங்கதுரை, படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், தங்கதுரையை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேகமாக வந்த டேங்கர் லாரி, வேப்ப மரத்தில் மோதியதால் அதன் வேகம் சற்று குறைந்து, அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது லேசாக மோதியபடி நின்று விட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சமையல் கியாசுடன், வந்த வேகத்தில் டிரான்ஸ்பார்மர் மீது டேங்கர் லாரி மோதி இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.