ஊட்டியில் தென்மேற்கு பருவமழை எதிரொலி: அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

தென்மேற்கு பருவமழை எதிரொலியால் ஊட்டியில் அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. இதில் 3 அணைகள் நிரம்பின.
ஊட்டியில் தென்மேற்கு பருவமழை எதிரொலி: அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ஊட்டியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்கின்றது.

குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையில் காணப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு ஊட்டி நகரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

ஊட்டியில் பெய்த தென்மேற்கு பருவமழை எதிரொலியால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. கோடப்பமந்து அப்பர் அணை தனது முழு கொள்ளளவான 12 அடி, தொட்டபெட்டா லோயர் அணை 14 அடி, கிளன்ராக் அணை 7 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளன. அந்த 3 அணைகள் நிரம்பி உள்ளன.

முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணை தனது 23 அடி முழு கொள்ளளவில் 12.5 அடியை எட்டி உள்ளது. தற்போது அந்த அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. கோடப்பமந்து லோயர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

ஊட்டியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஊட்டி நகராட்சியில் வசித்து வரும் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை. இதுகுறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறும்போது, ஊட்டி நகராட்சியில் தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது. சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com