

சேலம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 35 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 31 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்து வந்த 60-க்கும் மேற்பட்ட பகுதிகள் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாத பல இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன்படி சேலம் சின்னக்கடை வீதி, களரம்பட்டி, கருங்கல்பட்டி, வ.உ.சி. மார்க்கெட் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் நேற்று அந்த பகுதிகளில் மளிகை கடைகள், டீ கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. அதுவும் இடது புறமாக உள்ள கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் வெளியே வந்து பொருட்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது. முன்னதாக சின்னக்கடை வீதியில் திறக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
வலது புறமாக உள்ள கடைகள் இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.