கட்டணம் உயரவும் வாய்ப்பு: விமான இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு - மதுரை விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்

புதிய கட்டுப்பாடுகளால் விமானங்களின் இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால், விமான கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக மதுரை விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கட்டணம் உயரவும் வாய்ப்பு: விமான இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு - மதுரை விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்
Published on

மதுரை,

விமானங்களை இயக்குவதற்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து மதுரை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 4 வெளிநாட்டு விமானங்களும், 21 உள்நாட்டு விமானங்களும் என 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின் விமானங்கள் இயக்கப்படுவதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது. இருப்பினும் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விமானத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்க வழிசெய்யப்படும். அதாவது 3 நபர்கள் இருக்கும் இருக்கைகளில் நடுவிலுள்ள இருக்கையில் யாரும் அமராமல், இருபுறங்களிலும் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமருவார்கள்.

இதுபோல் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலைய வளாகத்துக்கு வரும் வகையில் அறிவுரை வழங்கப்படும். அதாவது தற்போது ஒரு மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் பயணிகள் வருகிறார்கள். ஒரு மணி நேரம் என்பது இனி 3 மணி நேரமாக அதிகரிக்கப்படும்.

முன்கூட்டியே விமான நிலையத்திற்குள் வரும் பயணிகள், விமான நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள். அதன்பின்னர் தங்களுக்கான விமானத்தில் ஏறி பயணம் செய்யலாம். 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படும் பட்சத்தில் அந்த பயணிகள் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு காரிலேயே சென்று விடுவார்கள். இது போல் சிலர் ரெயில் சேவையை பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

முதற்கட்டமாக மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாட்டு விமானங்கள் சில மாதங்களுக்கு பிறகு இயக்கப்படலாம்.

189 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 120 பயணிகள் மட்டுமே அமரவேண்டும். இதுபோல் 78 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 38 பயணிகள் மட்டுமே அமர வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டிக்கெட் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிகளவு விமானங்களை இயக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் விமானங்களை இயக்குவதற்கு புதிய அட்டவணை தயார் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.

அதாவது ஒவ்வொரு விமானமும் வந்து செல்லும் நேரத்திற்கு இடையே குறைந்தபட்சம் ஒரு மணி நேர கால இடைவெளி விடப்படும். இதனால் விமானங்களின் எண்ணிக்கையும், விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் தேங்காதவாறும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தீரும்வரை விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதுபோல் குறிப்பிட்ட மாதங்களுக்கு விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஸ்க்ரீன்ங் டெஸ்ட் எனப்படும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள், இங்கிருந்து வெளியூர் செல்லும் நபர்கள் என அனைவரும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

இது போன்ற புதிய கட்டுப்பாடுகளால் விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அரசு அறிவுரைகளை பின்பற்றியே பயணிகள் பயணிக்க வேண்டும். அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விமானங்களின் இருக்கையானது 3 + 3 என்ற வகையிலும், 2 +2 என்ற வகையிலும் அமைந்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேர் மட்டுமே அமர்வார்கள். அதுபோல் 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமருவார். இதன் மூலம் அந்த விமான நிறுவனத்திற்கு எப்படியும் 50 சதவீதத்திற்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும்.

இது போல் விமான நிலையத்திலிருந்து விமானத்திற்குள் பயணிகள் ஏரோ பிரிட்ஜ் என்ற நடைமேடை வழியாக நடந்து செல்வார்கள். ஏரோ பிரிட்ஜ் இல்லாத விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளை பஸ்சில் அழைத்து செல்வார்கள். ஆனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது இருப்பதால் விமான நிலையத்திற்குள் பஸ்சில் அழைத்துச் செல்வதிலும் சிக்கல்கள் ஏற்படும். இதனை சரிசெய்ய அதிக பஸ்களை இயக்க வேண்டிய நிலையும் உருவாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com