பஸ்கட்டண உயர்வை கண்டித்து 27-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்

பஸ்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பஸ்கட்டண உயர்வை கண்டித்து 27-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மார்ச் 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே மார்ச் மாதம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவதோடு, மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஆதரவற்றோர், முதியோர், காதுகேளாதோர், பார்வையற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கியும் கொண்டாட வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும் உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுமக்களை பதிக்கும் வகையில் தமிழக அரசு பஸ்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து வருகிற 27-ந்தேதி தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், நகர செயலாளர் நீலமேகம், ஒன்றிய செயலாளர் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ்கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் அண்ணாதுரை, புண்ணியமூர்த்தி, எல்.ஜி.அண்ணா, பாக்கியவதி, காரல்மார்க்ஸ், ஜித்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com