

தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜாராம் வர்மா, பாலகிருஷ்ணன், இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் முத்து, பாடி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வை வெளிப்படுத்தும் வகையில் மாட்டுவண்டியில் மோட்டார்சைக்கிளை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
விலைவாசி உயர்வுக்கு காரணமாக விளங்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் ஜனகராஜ், சரவணன், சண்முகம், காமராஜ், வஜ்ரன், பிரகாஷ், சுபாஷ், மாவட்ட நிர்வாகி பாண்டு, உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி தீபன் நன்றி கூறினார்.