புகழ்ந்து பேசிய விவகாரம்; மோடியின் கருத்துக்கு புதிய அர்த்தம் கற்பிக்க வேண்டாம் - தேவேகவுடா

என்னை புகழ்ந்து பேசிய விவகாரத்தில் மோடியின் கருத்துக்கு புதிய அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று தேவேகவுடா கூறினார்.
புகழ்ந்து பேசிய விவகாரம்; மோடியின் கருத்துக்கு புதிய அர்த்தம் கற்பிக்க வேண்டாம் - தேவேகவுடா
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அமித்ஷா, குமாரசாமி ஆகியோர் விமானத்தில் பயணம் செய்து ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவை புகழ்ந்து பேசினார். நாட்டின் உயர்ந்த தலைவர்களில் தேவேகவுடாவும் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டினார். இதன் மூலம், தான் கூறிய பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி குற்றச்சாட்டு உண்மை என நிரூபணம் ஆகியுள்ளதாக சித்தராமையா கூறினார். சித்தராமையாவின் இந்த கருத்தை நிராகரித்த தேவேகவுடா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 2 தேசிய கட்சிகளுக்கு இடையே மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடி வருகிறது. இந்த கட்சியை காப்பாற்ற நான் பல்வேறு வகைகளில் போராடியுள்ளேன். வேதனைகளை அனுபவித்து உள்ளேன். பிரதமர் மோடி என்னை புகழ்ந்து பேசி இருக்கிறார். மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அந்த மாநிலத்தில் உள்ள விவரங்களை பெற்று அதற்கேற்ப பேசுகிறார். என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு மோடி பேசுகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எனது மாவட்டத்திற்கு வந்து என்னை விமர்சித்து பேசினார். இந்த பேச்சையும் மோடி கவனித்துள்ளார். நான் பிரதமர் பதவியில் இருந்தவன் என்ற முறையில் அதற்கு மரியாதை கொடுத்து மோடி பேசி இருக்கலாம். பிரதமர் ஆன பிறகு மோடி மாறவில்லை. நானும் மாறவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி சொந்த பலத்தில் ஆட்சி அமைத்தால், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினேன்.

அவர் சொந்த பலத்தில் ஆட்சி அமைத்ததால், நான் எனது பதவியை ராஜினாமா செய்து மோடியிடம் கடிதம் கொடுத்தேன். அதை அவர் வாங்காமல், உங்களின் அனுபவம் எங்களுக்கு தேவை என்று கூறி என்னை அனுப்பி வைத்தார். தேர்தலின்போது குற்றம்சாட்டி பேசுவது சகஜமானது என்றும் அவர் கூறினார். இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

யாரோ ஒருவர் எழுதி கொடுத்ததை ராகுல் காந்தி படித்தார். அவர் சிறியவர். அரசியலில் அவர் இன்னும் வளர வேண்டும். விதான சவுதாவில் இருந்த எனது உருவப்படத்தை சித்தராமையா அகற்றினார். எடியூரப்பா கூட அதை செய்யவில்லை. ஆனால் என்னால் வளர்ந்த சித்தராமையா, எனது உருவப்படத்தை அகற்றினார். இதையெல்லாம் மோடி தெரிந்து கொண்டிருப்பார். கன்னடர் ஒருவர் பிரதமராக இருந்ததை நினைத்து பெருமைகொள்ள வேண்டும்.

எனக்கு மரியாதை அளிக்கும் விதமாக மோடி என்னை புகழ்ந்து பேசி இருக்கிறார். இதற்கு புதிய அர்த்தம் கற்பிக்க வேண்டாம். மோடி என்னை புகழ்வதும் வேண்டாம், இகழ்வதும் வேண்டாம். குடும்ப அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். கிருஷ்ணப்பாவுக்கு நான் எங்கள் கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்கினேன். அவர் இறந்த பிறகு அவருடைய மகளுக்கு அந்த பதவியை வழங்க நான் முன்வந்தேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. சமூகநீதி மற்றும் கட்சியை கட்டமைப்பது எனக்கு தெரியும்.

கர்நாடகத்தில் எடியூரப்பா, கெங்கல் ஹனுமந்தய்யா, பங்காரப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் தனி கட்சியை தொடங்கினர். ஆனால் அவர்களால் கட்சியை நடத்த முடியவில்லை. நான் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்துக் கொண்டு எங்கள் கட்சியை காப்பாற்றி வருகிறேன். நாங்கள் கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். அந்த நிலையை தடுக்கவே பகுஜன் சமாஜ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். அதனால் நாங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம்.

தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 2004-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆக சித்தராமையா விரும்பினார். அதை நான் மற்றும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி உள்ளதாக கூறி எங்களுக்கு கிடைக்கும் முஸ்லிம் ஓட்டுகளை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். சித்தராமையாவின் இந்த முயற்சி தோல்வியில் தான் முடியும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நாங்கள் என்ன செய்தோம் என்பது அந்த மக்களுக்கு தெரியும்.

ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு இந்த முறை மாயாவதி, ஓவைசி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதனால் இந்த முறை எங்கள் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது உறுதி. நான் எப்போதும் கருத்துக்கணிப்பு நடத்துவது இல்லை. கருத்துக்கணிப்பு முடிவுகளை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை.

பெலகாவியில் பேசும்போது மகதாயி நதிநீர் பிரச்சினை பற்றி மோடி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மோடி அதுபற்றி வாய் திறக்கவில்லை. அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. எனது வாழ்க்கையில் சித்தராமையா ஆட்சியை போல் மிக மோசமான ஆட்சியை பார்த்தது இல்லை. சித்தராமையா 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.

காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி பேசி இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு வருவதை தவிர்க்கவே எங்கள் குடும்பத்தில் 2 பேருக்கு மட்டும் டிக்கெட் கொடுப்பது என்று முடிவு எடுத்தேன். அதனால் தான் பிரஜ்வலுக்கு டிக்கெட் வழங்கவில்லை. அசோக் கேனியை காங்கிரசார் சேர்த்துக் கொண்டனர். ரெட்டி சகோதரர்களை பா.ஜனதாவினர் சேர்த்துக் கொண்டனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் இரண்டும் சகோதரர்களை போன்றது. விமானத்தில் அமித்ஷா, குமாரசாமி ஆலோசனை நடத்தியதாக சித்தராமையா கூறிய குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் வழங்கப்படும் இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com