பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தேர்தலில் கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

என் மீதான குற்றச்சாட்டுகளை கர்நாடக மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தேர்தலில் கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
Published on

பெங்களூரு,

பல்லாரி மாவட்டம் ஒசபேட்டேயில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல்மந்திரி சித்தராமையா பேசியதாவது:

எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கர்நாடக வரலாற்றிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு தான். எந்த ஒரு சாதி, சமுதாயம் என்ற தனிப்பட்ட முறையில் பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் தேவையான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளேன். ஏழைகளுக்காக இந்திரா மலிவு உணவகம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திட்டங்களை வகுத்து, இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தி உள்ளேன்.

இதற்கு முன்பு 5 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியை கர்நாடக மக்கள் பார்த்துள்ளனர். பல்லாரி மாவட்டம் ரெட்டி சகோதரர்கள் கையில் இருந்தது. இங்குள்ள மக்கள் ஒரு விதமான அச்சத்திலேயே வாழ்ந்தனர். பல்லாரியில் நடந்து வந்த சுரங்க முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க பாதயாத்திரை சென்றேன். தற்போது பல்லாரி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். பல்லாரி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இதனை யாராலும் உடைக்க முடியாது.

இந்த நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பேசுவதில்லை. பா.ஜனதா கட்சியின் தலைவராகவும் கூட அவர் பேசுவது கிடையாது. பொய் மட்டுமே அவரது வாயில் இருந்து வருகிறது. அவர் நமது நாட்டின் பிரதமர் என்பதையே மறந்து, ஒரு சாதாரண மனிதன் போல கீழ்த்தரமாக பேசி வருகிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டை பிரதமர் கூறுகிறார். அதுவும் எடியூரப்பா, கட்டா சுப்பிரமணிய நாயுடுவை அருகில் வைத்து கொண்டு நான் ஊழலில் ஈடுபடுவதாகவும், 10 சதவீதம் கமிஷன் பெறுவதாகவும் சொல்கிறார். என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூற பிரதமருக்கு தகுதி இல்லை.

எடியூரப்பா சொல்வதை கேட்டுக் கொண்டு என் மீது இந்த குற்றச்சாட்டை பிரதமர் கூறியுள்ளார். எடியூரப்பா யார்?, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு, ஊழலில் ஈடுபட்டதால் சிறைக்கு சென்றது, இதையெல்லாம் மறந்து விட்டு என்னை பற்றி பிரதமர் பேசுகிறார். கர்நாடகத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறுகிறார். பா.ஜனதா ஆட்சியில் உள்ள உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், அரியானா மாநிலங்களில் சட்டம்ஒழுங்கு சரியாக உள்ளதா?. அங்கு தான் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அந்த மாநிலங்களில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்திருப்பது, குற்றங்கள் நடப்பது பிரதமரின் கண்ணுக்கு தெரியவில்லையா?. கர்நாடக அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதை பிரதமர் நிறுத்த வேண்டும். நீங்கள் எத்தனை பொய்கள் சொன்னாலும், உங்களை கர்நாடக மக்கள் நம்பமாட்டார்கள். மக்களிடையே மதவாத பிரச்சினைகளை தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பிரதமரும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது. எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது மக்களிடையே எந்த எதிர்ப்பும் இல்லை. ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

கர்நாடகத்தில் பா.ஜனதா போன்ற மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது. மற்ற மதத்தினர் பா.ஜனதாவுக்கு தேவையில்லை. இந்துக்களிலும் ஏழ்மையாக இருப்பவர்கள் பா.ஜனதாவினரால் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என் மீதும், காங்கிரஸ் அரசு மீதும் எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை சொன்னாலும், கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. அவர்களுக்கு சட்டசபை தேர்தலில் கர்நாடக மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று, ராகுல்காந்தி பிரதமராவது உறுதி.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com