

திருவாரூர்,
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் முழுமையாக விலகாத நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கினை வரும் 15-ந் தேதி வரை அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இதில் பல்வேறு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி உள்ளது. வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதுடன், தனி நபர்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
திருவாரூர் சேந்தமங்கலம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் கடந்த ஒரு மாதமாக விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். ஊர்வலம் மற்றும் சிலை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
அரசின் தடையால் உற்பத்தி செய்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் நாங்கள் தயாரித்து வைத்திருந்த சிலைகள் விற்பனை ஆகாத சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று விட்டோம். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து தொழில்களும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் வந்தோம்.
சிலைகளை என்ன செய்வது?
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக எளிதில் கரைய கூடிய வகையில் கிழங்கு மாவு மூலம் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் விநயாகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளதால் கவலை அடைந்துள்ளோம். தயாரித்த சிலைகளை என்ன செய்வது? என்று தெரியவில்லை என்றனர்.