புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதியா? எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்து உள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதியா? எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுள்ள நிலையில் 17 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி நடக்கிறது. மாகி தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவரும் ஆட்சிக்கு ஆதரவாக உள்ளார்.

எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் அந்த கட்சியின் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பதவி பறிபோனது. அ.தி.மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா புதுச்சேரிக்கு வந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுத்து புதுவையில் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சிகள் நடந்தன. இதற்காக அப்போது கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

பாரதீய ஜனதா கட்சிக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்றத்தில் 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சி மாற்றத்துக்கு 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

இந்தநிலையில் தற்போது எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதாவது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோர் சபாநாயகரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்களை எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்து ஆட்சி மாற்றம் செய்ய வற்புறுத்துவதாகவும், அதற்காக பணம், பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான உரையாடல் ஆதாரங்களையும் அவர்கள் கொடுத்திருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர் பணிகளை செய்ய சிலர் தடங்கல் செய்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோர் என்னிடம் புகார் தந்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.ஏ. அல்லாத சிலரும் தொந்தரவு கொடுத்ததாக அவர்கள் புகாரில் கூறியுள்ளனர்.

இந்த புகார்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது? எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறேன். பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சி தலைமையிடமும் புகார் கொடுத்திருப்பார்கள். இந்த புகார்கள மீது சட்டமன்ற விதிகளின்படி விசாரித்து நடவடிக்கை எடுப்பதா? அல்லது காவல்துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com