

ஈரோடு,
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறி செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே முதலாம் மற்றும் 2-வது நடைமேடைக்கும், 3-வது மற்றும் 4-வது நடைமேடைக்கும் பொதுவாக 2 லிப்ட்கள் (பளுதூக்கி) அமைக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் லிப்ட்கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பயணிகள் தங்களது உடைமைகளை படிக்கட்டு வழியாக சிரமப்பட்டு தூக்கி கொண்டு செல்கிறார்கள். எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கி மெதுவாக நடந்து வந்தது. பின்னர் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நகரும் படிக்கட்டுகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முழுமையாக முடிந்து விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.