

பெங்களூரு,
வட கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வந்தது. அத்துடன் மராட்டிய மாநிலத்தில் கொய்னா அணை திறந்துவிடப்பட்டதால், அதிகளவில் தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த ஆறு ஓடும் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்று படுகையில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் தண்ணீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 1,024 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மழைக்கு மாநிலத்தில் 31 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 924 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 2.18 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வட கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆயினும், மராட்டிய மாநிலம் கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், கர்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேற்றும், ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பலரை மீட்டனர்.
துங்கபத்ரா அணையில் இருந்து அதிகளில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. உலக புகழ்பெற்ற ஹம்பி சுற்றுலா தலத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. விஜயாப்புரா மாவட்டம் மல்லபிரபா ஆற்றில் அதிகளவில் தண்ணீர் பாய்ந்தோவதால், அந்த படுகையில் உள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா வீராபுரகுட்டா பகுதியில் சுற்றுலா சென்ற வெளிநாட்டு பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்பு படையினர் சென்று பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். அதே போல் யாதகிரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வட கர்நாடகத்தில் தற்போது மழை குறைந்து வருகிறது. ஆனால் கால்நடைகள் பெரிய அளவில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்துள்ளன. இதனால் மழை குறைந்து வரும் நிலையிலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பது அரசுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு சரியான முறையில் உணவு, உடை, மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்று அங்கு இருப்பவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இன்னொருபுறம் தென் கர்நாடகத்தில் உள்மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்தது. இதனால் சார்மாடி காட் ரோடு மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
குடகு, ஹாசன், சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சாகர் தாலுகாவில் உள்ள சிகந்தூர் சவுடேஸ்வரி கோவிலுக்கு வர வேண்டாம் என்று பக்தர்களுக்கு அந்த கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு 2.60 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நேற்று முன்தினத்தை விட நேற்று அந்த அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து அளவின் அடிப்படையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணை தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.
மண்டியாவில் அமைந்துள்ள இந்த அணைக்கு அதிகளவில் நீர்வரத்து இருந்தாலும், அந்த மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகள் வறட்சியில் தத்தளிக்கின்றன. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ள ஆலேகான் ஹொரட்டி கிராமத்தை சேர்ந்த 76 பேரை ராணுவ வீரர்கள் மீட்டு, 2 வாகனத்தில் அழைத்து வந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.