

விருதுநகர்,
ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராஜபாளையத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, மீனாட்சிபுரம் பஞ்சம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நாடார் சமுதாயம், தேவர் சமுதாயம், தேவேந்திர குல சமுதாயம், ஆதிதிராவிட சமுதாயம், யாதவர் சமுதாயம், 24 மனை செட்டியார் சமுதாயம் உட்பட பல்வேறு சமுதாய நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்து அமைச்சர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் பேசும்போது ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மக்கள் அதிமுகவிற்கு அளிக்கும் வரவேற்பு 1972 காலங்களில் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு அளிக்கும் வரவேற்பு போல் ஆரவாரமாக உள்ளது. நான் 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் கிராமப்புறங்களுக்கு முக்கூடல் குடிநீர் திட்டம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் நகராட்சிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.கொரோனா பாதிப்பு ஒரு சில பணிகள் முடிவடைய தாமதமாகியுள்ளது. இருப்பினும் பணிகள் விரைவில் முடிவடையும்.
மேலும் 50 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. செட்டியார்பட்டி சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் பேவர் பிளாக் பதித்து அமைத்து கொடுத்துள்ளேன். நான் கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் நான் தான் கொண்டு வந்தேன் என பொய்யாக கூறிவருகிறார். சட்டமன்றத்தில் நான் எடுத்துக் கூறிய கருத்துக்களை முன்வைத்து இத்திட்டங்கள் இப்பகுதிக்கு வழங்கப்பட்டன. சட்ட மன்றத்தில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் இங்குள்ள பிரச்சனைகள் பற்றி பேசவே மாட்டார்.
சட்ட மன்றத்திற்கு வந்த உடன் வெளியே சென்று விடுவார். ராஜபாளையம் ஒரு தொழில் நகரம். இப்பகுதியில் தொழில் வளர்ச்சியடைய பாடுபடுவேன். எந்த திட்டங்கள் கொண்டு வரவேண்டும் எனவும், மத்திய அமைச்சர் யாரை சந்திக்கவேண்டும் என 10 வருட காலம் அமைச்சராக இருந்து தெரிந்து செயல்படுத்தியுள்ளேன்.
ராஜபாளையத்தை திருப்பூர் ஆக மாற்றி காட்டுவேன். ராஜபாளையம் தொகுதியில் 14 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளேன் நான் சிவகாசி தொகுதியில் பட்டாசு ஜிஎஸ்டி வரி 28 சதவிகித்திலிருந்து 18 சதவிகிதமாக ஆக குறைத்துள்ளேன். தீப்பெட்டிக்கு 18 லிருந்து 12 குறைத்துள்ளேன். பட்டாசு தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து கொடுத்துள்ளேன், சிவகாசியில் அரசு கலைக் கல்லூரி , மருத்துவமனை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதேபோல் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை நான் கொண்டு வருவேன்.
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிவதற்கு முன்பு சென்னை மாகாணம் மிகப் பெரிய மாகாணமாக இருந்தது. அந்த பெருமைக்குரிய சென்னை மாகாணத்தின் சுதந்திரத்துக்குப் பின் முதல் முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் திருவுருவ படம் தமிழக சட்டமன்றத்தில் வைக்க முயற்சி எடுத்தேன். தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டதால் வைக்க முடியவில்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் சட்ட மன்றத்தில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் திருவுருவ படம் திறந்து வைக்கப்படும் தங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.