

வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள முகவனூர் ஊராட்சியில் பாம்பாட்டிபட்டி உள்ளிட்ட சில கிராமங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையான வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணிக்கு சென்ற நாளில் முறையான சம்பளம் வழங்காமல், பணிக்கு வராத சிலரை பணிக்கு வந்ததாக பணிப்பதிவேட்டில் குறிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.
இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று முகவனூர் ஊராட்சியில் உள்ள பாம்பாட்டிபட்டி உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தொழிலாளர்கள் நேற்று காலை வையம்பட்டி கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் பணி இல்லாமல் மிகுந்த வறுமையில் வாடி வரும் சூழ்நிலையில் 100 நாள் வேலையும் வழங்கப்படாமல் இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். ஆகவே பணி உடனே பணி வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணவழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.