சென்னை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் ஸ்பெயின் நாட்டில் இருந்து கடத்தல்

ஸ்பெயின் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் ஸ்பெயின் நாட்டில் இருந்து கடத்தல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் சரக்ககப் பிரிவுக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், தபால் சரக்ககப்பிரிவுக்கு வந்த பார்சல்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது ஸ்பெயின் நாட்டில் இருந்து புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

ரூ.56 லட்சம் மதிப்பு

சந்தேகத்தின்பேரில் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 2 வெள்ளி கவர்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது 994 பிங்க் நிற போதை மாத்திரைகளும், 249 ஸ்டாம்ப் போதை மாத்திரைகளும் இருந்தன. ரூ.56 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், புதுச்சேரியில் உள்ள அந்த முகவரிக்கு சென்று சோதனை செய்தனர்.

அந்த முகவரியில் நெல்லையைச் சேர்ந்த ஓவியக்கலைஞரான ரூபக் மணிகண்டன் (வயது 29), கோழி பண்ணையில் வேலை செய்யும் லாய் வைகஸ் (28) ஆகியோர் இருந்தனர்.

அந்த வீட்டில் சோதனை செய்தபோது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

2 பேர் கைது

இது தொடர்பாக ரூபக் மணிகண்டன், லாய் வைகஸ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், ஸ்டாம்ப் மாத்திரைகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் என தெரியவந்தது. கைதான 2 பேரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com