

திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் 20-ந்தேதி கடந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை இதுவரை வழங்காததையும், இலவச பஸ் பாஸ் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் கல்லூரி முன்பாக மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை- நாகை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தநிலையில் திருவாரூர் தாலுகா போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி 2 பிரிவின் கீழ் மாணவர்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.