புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

உல்லாசமாக இருக்க அழைத்ததுடன் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
Published on

பெங்களூரு: உல்லாசமாக இருக்க அழைத்ததுடன் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

வீடு விஷயத்தில் பிரச்சினை

பெங்களூரு பானசாவடி சக்திநகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு சொந்தமான வீட்டில் சுமதி, வரலட்சுமி என்ற பெண்கள் தங்களது கணவர்கள் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். அந்த வீட்டிற்கு ரூ.7 லட்சம் கொடுத்து சுமதி, வரலட்சுமி ஆகியோர் ஒத்திக்கு இருந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஒத்திகாலம் முடிந்ததும் அந்த வீட்டை காலி செய்யும் விஷயத்தில் வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கும், சுமதி மற்றும் வரலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஹெண்ணூர் போலீஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரான பெண்ணும், சுமதி மற்றும் வரலட்சுமியும் தனித்தனியாக புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் சுமதியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த்குமார், வீட்டு உரிமையாளரான பெண்ணின் புகார் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது.

உல்லாசமாக இருக்க அழைப்பு

மேலும் வீட்டு உரிமையாளரான பெண்ணிடம், இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் ஆபாசமாக பேசியதுடன், நான் அழைக்கும் போது உல்லாசமாக இருக்க வர வேண்டும் என்றும் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டை காலி செய்யும் விஷயத்தில் வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கும், சுமதி, வரலட்சுமி ஆகியோருக்கும் தகராறு உண்டானது. அப்போது சுமதி, வரலட்சுமி மற்றும் அவர்களது கணவர்கள், பிள்ளைகள் ஆகியோர் சேர்ந்து வீட்டு உரிமையாளரான பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட ஹெண்ணூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சுமதி, வரலட்சுமி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது புகார் அளிக்க முயன்று உள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் மீது புகார்

தாக்குதலில் காயம் அடைந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாக இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் மீது நேற்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அந்த பெண் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் எனது தரப்பில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ளாமல், எனது வீட்டில் குடியிருப்பவர்களுக்கு ஆதரவாக ஹெண்ணூர் இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் செயல்பட்டு வருகிறார்.

எனது புகாரை எடுத்து கொள்ள வேண்டும் என்றால் என்னை உல்லாசமாக இருக்க அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பெண்ணிடம் புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் அலுவலக போலீசார் புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் பாலியல் புகார் அளித்து உள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com