

திருச்சி,
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) இரவு திருச்சி மாநகரில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்பேரில், தமிழக டி.ஜி.பி. வழங்கிய அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் மதுஅருந்தி கொண்டு குடிபோதையில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் அதிகவேகமாகவும், ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கேலி செய்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது.
மாநகரில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து சோதனைசாவடிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் 2 பேருக்கும் மேல் அமர்ந்து செல்வதை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். பொதுஇடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது அருந்துதல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யாரேனும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் அது குறித்து திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100-க்கும், நுண்ணறிவுபிரிவு எண் 0431-2331929, செல்போன் 94981-00615-க் கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.