

சிவமொக்கா,
சிவமொக்கா தாலுகா தேவகாதிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது 30). இவரது மனைவி ராணி(25). கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக மகேசுக்கும், ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மகேசுக்கும், ராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை உண்டானது.
இதனை தொடர்ந்து மகேஷ் வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் ராணி வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் அங்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராணியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை மகேஷ் கொலை செய்து இருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராணியின் அண்ணன் சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் மகேசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராணியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மகேஷ், பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டது அம்பலமானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான மகேஷ் மீது சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.