முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக மண் பாதை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக மண் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக மண் பாதை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
Published on

ஜீயபுரம்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக திருச்சி முக்கொம்பில் வாத்தலை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அணை கட்டப்பட்டது. 630 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாக வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். மேலும் அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த கன மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த அணையில் உள்ள மதகுகளின் வழியாக கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 182 ஆண்டுகள் பழமையான இந்த அணையில் சுமார் 8 மதகுகள் திடீரென இடிந்தது. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன. இதனால் அணைக்கட்டும், பாலமும் சுமார் 96 மீட்டர் அளவிற்கு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக கரூர் சாலையில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வாத்தலை கிராமம் மற்றும் எலமனூர் கிராமங்களின் இடையே முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.388 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பாலம் இல்லாததால் பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கரூர் சாலையில் இருந்து வாத்தலை பகுதிக்கு செல்லமுடியாமல் நீண்டதூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் அவர்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுகே தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவுக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மணல் கொட்டப்பட்டு தற்காலிக மண் பாதை அமைக்கப்பட்டுள் ளது. இதனால் மாணவ- மாணவிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணியை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com