பாபநாசம் அருகே பள்ளத்தில் பஸ் இறங்கியது; 30 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கோயம்புத்தூரில் இருந்து சுற்றுலா வந்த பஸ், பள்ளத்தில் இறங்கியது. அதில் பயணம் செய்த 30 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாபநாசம் அருகே பள்ளத்தில் பஸ் இறங்கியது; 30 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Published on

பாபநாசம்,

கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உள்பட 30 பேர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி கோயம்புத்தூரில் இருந்து தனியார் பஸ்சில் கும்பகோணம் புறப்பட்டனர்.

இந்த பஸ் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாபநாசத்தை அடுத்த உத்தாணி கிராமத்தில் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திட்டமிட்டபடி நல்லூரில் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதையில் செல்லாமல், வேறு பாதையில் பஸ் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து டிரைவர், நல்லூருக்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார். அப்பகுதி சாலை குறுகலாக இருப்பதால் பஸ்சை திருப்புவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பஸ் பின்னோக்கி ஓடி, சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதையடுத்து டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார்.

இதனால் பஸ், பள்ளத்தில் முழுவதுமாக இறங்கி வயலில் கவிழ்வதில் இருந்து தப்பியது. பஸ்சில் இருந்த 30 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் இருந்து பஸ்சை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com