திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பின்னோக்கி நடந்து வந்து சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பின்னோக்கி நடந்து வந்து மனுதாக்கல் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பின்னோக்கி நடந்து வந்து சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
Published on

திருவண்ணாமலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல், கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடமும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு அதே தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகாவை சேர்ந்த மனிதன் என்பவர் பின்னோக்கி நடந்தபடி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற மாட்டேன் என்று உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் கடந்த 26 ஆண்டுகளாக பின்னோக்கி தான் நடந்து வருகிறேன். நான் இதுவரை பல்வேறு தேர்தலில் போட்டியிடுவதற்காக 50-க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்துள்ளேன். இதில் ஒரு சில மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

வேட்பு மனுவுடன் ரொக்கமாகத் தான் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினருக்கான வேட்பு மனு தாக்கல் டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவில் சாதி என்ற இடத்தில் மனித சாதி என்று நான் குறிப்பிட்டு உள்ளேன். அதனால் எனக்கு டெபாசிட் கிடையாது. இருப்பினும் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை இணைத்து வழங்கி உள்ளேன் என்றார். வேட்புமனுதாக்கல் செய்வதற்காக மனிதன், பின்னோக்கி நடந்து வந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com