டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் கூட்டாக பேட்டி

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் கூட்டாக பேட்டியளித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் கூட்டாக பேட்டி
Published on

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தஞ்சையில் நேற்று அவர்கள் 4 பேரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரிடையாக பார்த்த பிறகுதான் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரிய வந்தது. தமிழக அரசு முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது. விவசாயிகளின் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளதால் ஏராளமான கிராமங்கள் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருளில் தவிக்கின்றன.

இதனால் மாணவர்கள் கல்வி பயில முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வருகிற 30-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாப்பாட்டுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை காணப்படுகிறது. வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்திருப்பதால் ஒரு வீட்டு அடுப்பில் 8 வீட்டு குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து உணவு சமைக்கிறார்கள். இதற்கு முன்பு பாதித்த புயலைவிட கடுமையான சேதத்தை இந்த கஜா புயல் ஏற்படுத்தி உள்ளது. இதில் வசதி படைத்தவர்களையும் மீறி நடுத்தர குடும்பத்திற்கு கீழான குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு தார்ப்பாய், மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் நிவாரணப்பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. உயிர் இழந்த ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜூக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியிருக்கிறோம்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க லாரிகளில் அரிசி மூட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை 2 நாட்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை சந்தித்து கொடுக்க உள்ளோம். மேலும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மூலமாகவும் மற்றும் எங்களுக்கு நிதி உதவிகள் செய்த தொழில் அதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள் ஆகியோர் மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற உதவிகளை மற்றவர்களும் செய்ய முன்வர வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

30 ஏக்கர் வைத்திருந்த வசதி படைத்த விவசாயிடம் தற்போது ஒரு மரம் கூட கிடையாது. அவர் தனக்கு அரசு கொடுக்கும் மானியம் போதாது என மிகுந்த வருத்தம் தெரிவித்தார். இதில் குறைந்த ஏக்கர் நிலங்களில் தென்னை விவசாயம் செய்தவர்களின் நிலை மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை காப்பாற்றவில்லை என்றால் மொத்த தமிழகமே பாதிக்கும். இந்த பகுதி மக்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நிவாரணம் என்பது இந்த பகுதி மக்களுக்கு நீண்ட நெடிய நிவாரணமாக இருக்க வேண்டும்.

புயல் பாதித்த இடங்களில் உடனடியாக மரங்களை அகற்றி அந்தப்பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்ட இடங்களில் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com