கவர்னர் உடனான மோதல் விவகாரம்: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு

கவர்னர் உடனான மோதல் விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
கவர்னர் உடனான மோதல் விவகாரம்: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு
Published on

மும்பை,

நாட்டின் தலைநகரான டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்துக்குள் வருவதால் பல்வேறு துறைகளில் முதல்-மந்திரியின் அதிகாரங்கள் கவர்னரை சார்ந்தே இயங்கும் வகையில் உள்ளன.

இதனால் மாநில கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்தது. இதன் காரணமாக மாநில அரசின் அன்றாட நிர்வாகம் முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முடங்கியுள்ளன.

மாநில அரசின் செயல்பாடுகளில் கவர்னர் குறுக்கிடுவது ஜனநாயக விரோதபோக்கு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடைமுறைகளில் கவர்னர் தலையிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கவர்னர் விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரீத்தி ஷர்மா மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்-மந்திரி கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரேயை தொடர்பு கொண்டு கவர்னர் விவகாரம் குறித்து விரிவாக கூறினார். அப்போது உத்தவ் தாக்கரே ஆம் ஆத்மி கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா கொள்கை ரீதியில் இரு வேறு துருவங்களாக பிரிந்து கிடக்கிறோம். ஆனால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து என வரும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றாய் இணைபவர்களே உண்மையான ஆட்சியாளர்கள் என தெரிவித்தார்.

இதற்கிடையே கெஜ்ரிவால்-உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்திய உத்தவ் தாக்கரேயின் ஊடக ஆலோசகர் ஹர்ஷால் பிரதான் இது தொடர்பாக கூறியதாவது:-

உத்தவ் தாக்கரேயை, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் டெல்லியில் கவர்னருடனான பிரச்சினைகள் குறித்து விவரித்தார். இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்தவொரு முட்டுக்கட்டையும் ஏற்படுத்தக்கூடாது என ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், இந்த விவகாரத்தை கொண்டு உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கோ அவரது கட்சிக்கோ ஆதரவு அளித்ததாக எடுத்து கொள்ளக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதைதான் சிவசேனா சொல்ல விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com