லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை தேவை டி.ஐ.ஜி. ரூபா சொல்கிறார்

பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கியதில் லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்புபடை விசாரணை தேவை என்று டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.
லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை தேவை டி.ஐ.ஜி. ரூபா சொல்கிறார்
Published on

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் வாங்கியதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

இதற்கான அறிக்கையை கடந்த ஜூலை மாதம் 11ந் தேதி டி.ஐ.ஜி. ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், கர்நாடக அரசின் தலைமை செயலாளர், கர்நாடக தலைமை டி.ஜி.பி., ஊழல் தடுப்பு படை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, சிறைத்துறையில் பணியாற்றிய சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். சத்திய நாராயணராவ் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். ரூபா, டி.ஐ.ஜி. அந்தஸ்திலேயே பெங்களூரு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

மேலும், பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் பணியாற்றிய அதிகாரிகள், போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். கைதிகளிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை சமீபத்தில் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததும் உண்மைதான் என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை குழுவினர் எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை எனவும், அதுபற்றிய விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறுகையில், பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், சொகுசு வசதிக்காக கைமாற்றப்பட்ட லஞ்சம் குறித்து விசாரணை நடைபெறவில்லை. ஏனென்றால் விசாரணை குழுவுக்கு அந்த அதிகாரம் இல்லை. லஞ்சம் கைமாறியது குறித்தும், சிறையில் எவ்வளவு காலம் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் ஊழல் தடுப்பு படை அல்லது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com