

இட்டமொழி,
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெயசீலன். இவருடைய மகன் மைக்கேல் நிக்சன் (வயது 19). இவர் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததார்.
இவர், நேற்று தன்னுடைய நண்பர்களுடன் ஊருக்கு அருகில் உள்ள ஒரு குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது அவர்கள், குளத்தின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்று வர வேண்டும் என்று முடிவு செய்து நீந்த தொடங்கினர்.
மைக்கேல் நிக்சன் உள்பட அனைவரும் எதிர் கரைக்கு சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து நீந்த தொடங்கி புறப்பட்ட கரைக்கு மைக்கேல் நிக்சனின் நண்பர்கள் அனைவரும் வந்து விட்டனர். ஆனால் மைக்கேல் நிக்சன் மட்டும் வந்து சேரவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தேடினர்.
அப்போது குளத்தின் நடுப்பகுதியில் மைக்கேல் நிக்சன் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் மைக்கேல் நிக்சன் தண்ணீருக்குள் மூழ்கி விட்டார்.
அவரை சுமார் 15 நிமிட தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். 108 ஆம்புலன்சு மூலம் அவரை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் நிக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.