மும்பையில் இந்து அமைப்பு தலைவரை கைது செய்ய கோரி போராட்டம்

மும்பையில் இந்து அமைப்பு தலைவரை கைது செய்ய கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் இந்து அமைப்பு தலைவரை கைது செய்ய கோரி போராட்டம்
Published on

மும்பை,

பீமா - கோரேகாவ் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய இந்து அமைப்பு தலைவரை கைது செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புனே பீமா -கோரேகாவ் போர் நினைவிடத்தில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தலித் அமைப்பினர் அஞ்சலி செலுத்த திரண்டு வந்த போது பயங்கர வன்முறை வெடித்தது. இதில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். பின்னர் இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த முழுஅடைப்பு போராட்டத்தின் போதும் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன.

மராட்டியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பீமா கோரேகாவ் வன்முறை சம்பவம் தொடர்பாக இந்து ஏக்தா பரிஷத் தலைவர் அமைப்பை சேர்ந்த மிலிந்த் எக்போதே மற்றும் சிவ் பிரதிஷ்தான் அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் மிலிந்த் எக்போதே போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து சம்பாஜி பிடேவையும் கைது செய்ய வேண்டும் என்று பாரிப் பகுஜன் மகாசங் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இல்லையெனில் மார்ச் 26-ந் தேதி மும்பையில் மிகப்பெரியளவில் பேரணி நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருந்தார். பைகுல்லாவில் இருந்து ஆசாத் மைதானம் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருப்பதால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதே நேரத்தில் இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தலித் அமைப்பினர் மும்பை நோக்கி வந்தனர்.

போலீசார் பேரணிக்கு அனுமதி மறுத்தால் அவர்கள் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் முன் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர்.

இதன் காரணமாக அங்குள்ள சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர்கள் ஆசாத் மைதானத்தில் சென்று சம்பாஜி பிடேவை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com