ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறும் வாயு, தீப்பற்றி எரிந்தது

விருத்தாசலம் அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறும் வாயு, தீப்பற்றி எரிந்தது. இதனை வருவாய்த்துறையினர் நேற்று நேரில் சென்று ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டனர்.
ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறும் வாயு, தீப்பற்றி எரிந்தது
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 40). பெரியவடவாடியில் உள்ள இவருடைய விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தண்ணீர் வந்ததால், ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் அமைக்கும் பணியில் முருகன் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்போது அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து ஒருவிதமான வாயு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், தீக்குச்சியை உரசி ஆழ்துளை கிணற்றின் அருகே கொண்டு சென்றார். அப்போது ஆழ்துளை கிணறு திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அவர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். தொடர்ந்து அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து வாயு வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

இதுபற்றி அறிந்ததும் விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று நேரில் சென்று ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டனர். அப்போதும், வாயு வெளியேறியது. இதையடுத்து வருவாய்த்துறையினர், சாக்குப்பையால் அந்த ஆழ்துளை கிணற்றை மூடி சீல் வைத்தனர். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் வந்து ஆய்வு செய்தால்தான் அது எந்த வகையான வாயு என்பது தெரியவரும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com