

கரூர்,
கரூர் சுங்ககேட் முதல் கலெக்டர் அலுவலகம் வரையிலான மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பொருட்டு ஓராண்டுக்கு முன்பு ரூ.6 கோடி மதிப்பில் விரிவாக்கப்பணிகள் தொடங்கின. இதில் சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஜல்லிக்கற்களை நிரப்பி தார்ச்சாலை அமைத்து வருகின்றனர்.
இந்த பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த வேப்பமரம், புளியமரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதற்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேறு ஒரு இடத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் ஏற்பாடு நடக்கிறது. மேலும் சாலையோரங்களில் இருந்த சிமெண்டால் ஆன பழைய மின்கம்பங்களும் அங்கிருந்து அடியோடு அகற்றப்பட்டன. அதற்கு மாற்றாக இரும்பினால் ஆன மின்கம்பங்கள் உடனடியாக அமைக்கப்பட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவில் வரை சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிந்து, சுங்ககேட்-கலெக்டர் அலுவலகம் சாலையின் நடுவே கான்கிரீட் சிலாப்புகளை வைத்து மைய தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு விபத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எனினும் சாலை விரிவாக்கப்பணியையொட்டி தாந்தோன்றிமலை பகுதியில் அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்படாமல் சாலையோரமாக போடப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி இந்த மின்கம்பங்களில் மோதி விபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது. எனவே சாலையோரமாக பயனற்று கிடக்கும் பழைய மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கம்பம் அகற்றும் பணியை மேற்கொண்டபோது சில இடங்களில் மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டு கீழே கிடக்கின்றன. எனவே இதனையும் சரி செய்ய மின்வாரிய அதிகரிகள் முன்வர வேண்டும். தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி அருகே மற்றும் சில இடங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டி வைக்கப்பட்டபடியே இருக்கிறது. எனவே இந்த பகுதியிலும் விரிவாக்கப்பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.