

யாதகிரி,
யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா சாமனாலா கிராமத்தை சேர்ந்தவர் பீமவவ்வா. இவரது மகள் நாகம்மா. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகம்மா கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பீமவவ்வாவும், நாகம்மாவும் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சகாப்புரா புறநகர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பீமவவ்வா, நாகம்மாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சகாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சகாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.