மும்பை சிவாஜி பார்க்கில் பால் தாக்கரேக்கு நினைவு சின்னம்

மும்பை சிவாஜி பார்க்கில் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேக்கு பிரமாண்ட நினைவு சின்னம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
மும்பை சிவாஜி பார்க்கில் பால் தாக்கரேக்கு நினைவு சின்னம்
Published on

மும்பை,

சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்தார். அவரது இறுதிச் சடங்கு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, பால் தாக்கரே நினைவாக சிவாஜி பார்க்கில் அரபிக்கடல் அருகே அமைந்துள்ள மேயர் பங்களாவில் பிரமாண்ட நினைவு சின்னம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

அதன்படி, 11 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட மேயர் பங்களா, பாலாசாகேப் தாக்கரே ராஷ்டிரீய சமாரக் நியாஸ் என்ற அறக்கட்டளை வசம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும், பால் தாக்கரே நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை மாநில அரசு நியமித்தது.

இந்த நிலையில், நேற்று மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த பணியை ஆய்வு செய்தார். அப்போது, ஆய்வு பணி விவரங்களை கேட்டறிந்த அவர், இத்திட்டத்தின் மீதான விரிவான ஆய்வு அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், வெளியே வந்த தொழிற்துறை மந்திரி சுபாஷ் தேசாய் (சிவசேனா) நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆய்வு அறிக்கை தயார் செய்யும் போது நினைவு சின்னத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், கட்டுமான பணி தொடங்கும். விரைவில் பால் தாக்கரே நினைவு சின்னம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com