

ஸ்ரீரங்கம்,
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;- ராஜீவ் காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காங்கிரஸ் கட்சியினர் மனதில் இருந்தும் கூட அந்த வடு மறைந்து இருக்கும். ஆனால் இன்னும் என் மனதில் மறையாத வடுவாக உள்ளது.என் மண்ணில் இந்த நாட்டின் தலைவராக இருந்த ஒருவரை படுகொலை செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யார் இத்தகைய செயலில் ஈடுபட்டாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இனிமேல் இப்படி நடந்தால், அதை வைத்து பெருமைப்பட்டுக்கொள்ள சிலர் இருப்பது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதையும், அவரை தாக்க முயன்றபோது, குறுக்கே பாய்ந்து தடுத்ததால் தனது காது கேட்கும் திறனை ஆற்காடு வீராசாமி இழந்ததையும், அவர் பேச கேட்டிருக்கிறேன். ஸ்டாலின் சிறை சென்றது உண்மை, தாக்கப்பட்டது உண்மை. ஆனால் சிட்டி பாபு கொலைக்கு காரணமானவர்களை தூக்கிக்கொண்டு திரிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்த வேட்பாளர், அவர் சார்ந்த கட்சி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்வதை சட்டம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.