பீகார் மாநிலம் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையம் வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

பீகார் மாநிலம் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையம் வந்த தொழிலாளர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
பீகார் மாநிலம் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையம் வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
Published on

திருப்பூர்,

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக ரெயில் மூலம் பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு ரெயில் இயக்கப்படுகிறதா? என்று வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் தங்களது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வந்தனர். மூட்டை முடிச்சுகளுடன் வந்த அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் ரெயில்கள் எதுவும் இயக்கப்பட வில்லை எனவே திரும்பிச் செல்லுங்கள் என கூறினர்.

ஆனால் அதற்கு பதிலளித்த அவர்கள், நாங்கள் பல்லடம் ரோடு கணபதி பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றோம். அங்கு வேலை இல்லாததால் பனியன் நிறுவனத்தினர் எங்களை குடும்பத்துடன் விரட்டி அடித்து விட்டதாகவும், மேலும் நாங்கள் மீண்டும் அங்கு சென்றால் எங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த சரவணகுமார் என்ற போலீஸ்காரர் அந்த வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்வதாக கூறி, பனியன் நிறுவனத்திள் செல்போன் எண்ணை பெற்று தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பனியன் நிறுவனத்தில் இருந்து பேசிய நபர் தங்கள் நிறுவனத்தில் இருந்து எந்த தொழிலாளர்களும் விரட்டியடிக்கப் படவில்லை என்று தெரிவித்தார். மேலும் ரெயில் நிலையத்திற்கு வந்த வடமாநிலத்தவர்கள் கடந்த சில தினங்களாகவே தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி தொல்லை கொடுத்து வந்ததாகவும் தற்போது எங்களது பேச்சையும் கேட்காமல் அவர்களாகவே ரெயில் நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்ளது போலீசார் பனியன் நிறுவனத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வடமாநிலத்தவர்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com