மழை வெள்ளத்தால் உருக்குலைந்த குடகில் இயல்பு நிலை திரும்புகிறது

மழை வெள்ளத்தால் உருக்குலைந்த குடகில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது குடகில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
மழை வெள்ளத்தால் உருக்குலைந்த குடகில் இயல்பு நிலை திரும்புகிறது
Published on

மழை சேதங்களை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.

குடகு,

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வந்த கனமழையாலும், நிலச்சரிவாலும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக சுமார் 4 ஆயிரம் பேர் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். குடகு மாவட்டத்தில் மொத்தம் 51 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய விமான படை, கடலோர காவல் படை, தீயணைப்பு படை, தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கனமழை, நிலச்சரிவால் குடகு மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடகு மாவட்டத்தில் மடிகேரி, மக்கந்தூர், ஆலேறி, சுண்டிகொப்பா, பாலூர், கல்லூர், தொட்டகுந்துபெட்டா, ஜோடுபாலா, சம்பாஜே ஆகிய பகுதிகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து வந்த கனமழை தற்போது குறைந்துள்ளது. மடிகேரியில் மட்டும் நேற்று மழை பெய்தது. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் குடகு மாவட்டத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் குடகிற்கு வந்து மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடகில் மழை வெள்ளம், நிலச்சரிவில் மேலும் யாராவது சிக்கி உள்ளனரா? என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ஆபத்தான பகுதிகளில் யாராவது சிக்கி உள்ளனரா? என்று ஹெலிகேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் உணவு பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மைசூருவில் இருந்து துணிகளும் விமானத்தில் குடகிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடகு மாவட்டத்தில் மழைவெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிரிழந்த தாய்-மகன் உள்பட 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. இந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மடிகேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 பேரின் உடல்களும் அடையாளம் காணமுடியவில்லை. மற்ற 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் எம்மேதாளு கிராமத்தை சேர்ந்த சந்திரவதி அவருடைய மகன் உமேஷ் என்பதும், மடிகேரி அருகே அஜ்ஜரபாடியை சேர்ந்த பவன் என்பதும் தெரியவந்தது. பவன் மாயமாகி விட்டதாக நினைத்து காட்டக்கேரி நிவாரண முகாமில் தனது குழந்தையுடன் தங்கியிருந்த அவருடைய மனைவி உமாவதி அவரை தேடி வந்தார்.

இந்த நிலையில் கணவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தை கேட்டு அவர் கதறி அழுதார். அவருக்கு அந்த நிவாரண முகாமில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். இதையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா, காட்டக்கேரி நிவாரண முகாமிற்கு சென்றார். அவர், பவனின் மனைவி உமாவதிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவருக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். அப்போது, பவனின் குழந்தையை கலெக்டர் ஸ்ரீவித்யா கொஞ்சி விளையாடினார். இது நிவாரண முகாம்களில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குடகு மாவட்டத்தில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. குடகு மாவட்டத்தில் மடிகேரி தவிர குசால்நகர், விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வழக்கம்போல பள்ளிகள் நடந்தன. பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். மடிகேரி பகுதியில் அதிகமான சேதம் ஏற்பட்டதால் அங்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நிவாரண முகாம்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கும் நேற்று வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குடகிற்கு வருகிறார். இன்று காலை குடகு மாவட்டம் குசால்நகர் அருகே ஹாரங்கி அணை பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். பின்னர் அவர், மடிகேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து அவர், மழையால் அதிகமாக பாதிக்கப்பட்ட குவெம்பு லே-அவுட், சாய் லே-அவுட் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

ஏற்கனவே பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி சதானந்தகவுடா உள்ளிட்டோர் குடகிற்கு சென்று மழை சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மழையால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ள குடகு மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சேதமடைந்த சாலைகள், மின் பிரச்சினை சரி செய்யப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகளுக்கு மாநில அரசு உடனடியாக ரூ.30 கோடியை ஒதுக்கி உள்ளது. குடகு மாவட்டத்தில் தற்போது மழை எதுவும் பெய்யாததால், 20 நாட்களுக்கு பிறகு குடகில் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதன்காரணமாக குடகில் 20 நாட்களுக்கு பிறகு மினி பஸ்கள், ஜீப்புகள் சேவை தொடங்கி உள்ளது. சுள்ளியா, மடிகேரி, பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகளில் மினிபஸ்கள் வழக்கம்போல இயங்கின. ஆனால் அரசு பஸ்கள் இயங்கவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் குடகு மாவட்டத்துக்கு தேசிய புவியியல் ஆராய்ச்சி மைய (என்.ஜி.ஆர்.ஐ.) விஞ்ஞானிகள் வந்து ஆய்வு செய்தனர். நேற்றும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். குடகு மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால், தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, அனைத்து நிவாரண முகாம்களிலும் சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து குடகு மாவட்டத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டாலும், முக்கொம்பு, ஊத்துமட்டே, காட்டக்கேரி உள்ளிட்ட நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு நிவாரண பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கூறுகையில், எங்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் எதுவும் சரிவர கிடைப்பதில்லை. உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு உடனடியாக நிரந்தரமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்றனர். இதேபோல முத்தப்பா கார்டன் பகுதியில் வசித்து வந்த கவுசியா பானு என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம், நிலச்சரிவில் இடிந்து விழுந்தது. இதனால் அவர் தற்போது நிவாரண முகாமில் தங்கி ஒருவேளை உணவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். தனக்கு உடனடியாக வீடு கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மடிகேரி டவுனில் மழை வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியதால் ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று மழை வெள்ளம் வடிந்ததால், அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி சென்றனர். அவர்களுக்கு நேற்று மடிகேரி நகரசபை அலுவலகத்தில் வைத்து மாநில அரசு அறிவித்த ரூ.3,800 மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப்பகுதி மக்கள் 2 மாதத்துக்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை குடகு மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிடுவதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் கிருஷ்ணபைரே கவுடா, யு.டி.காதர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வந்தனர். கிருஷ்ணபைரே கவுடா, மக்கந்தூர், ஜோடுபாலா, ஆலேறி உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மடிகேரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மந்திரி யு.டி.காதர், சுண்டிகொப்பா பகுதியில் உள்ள நிவாரண முகாமிற்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை மறுசீரமைப்பு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு வழங்க நிலத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு கண்டிப்பாக அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப் படும் என்றார்.

அதன்பின்னர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கூட்டாக குசால்நகர், மடிகேரி, சுண்டிகொப்பா ஆகிய பகுதிகளில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com