முக்கொம்பில் ரப்பர் படகு கவிழ்ந்து தீயணைப்பு மீட்புக்குழு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்

முக்கொம்பில் மதகுகள் சீரமைப்பு பணியின்போது, ரப்பர் படகு கவிழ்ந்து தீயணைப்பு மீட்புக்குழு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
முக்கொம்பில் ரப்பர் படகு கவிழ்ந்து தீயணைப்பு மீட்புக்குழு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்
Published on

திருச்சி,

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு உடைந்ததால், அந்தப்பகுதியில் அணை இடிந்தது. இதையடுத்து அந்த மதகுகளை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 800 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், ராட்சத எந்திரங்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் களின் பாதுகாப்புக்காகவும், மருத்துவ தேவைக்காகவும், தீயணைப்புத்துறை, மருத்துவத்துறையினர் அங்கு முகாம் அமைத்துள்ளனர். தீயணைப்பு மீட்புக்குழுவினர் ரப்பர் படகு மூலம் அவ்வப்போது கொள்ளிடம் அணை அருகே ரோந்து சென்று வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று பகல் தீயணைப்பு மீட்புக்குழுவை சேர்ந்த வீரர்கள் கனகராஜ், ராஜ்குமார் ஆகியோர் ரப்பர் படகில் ஆற்றில் கொள்ளிடம் அணை அருகே சென்றனர். அப்போது படகில் பொருத்தப்பட்டு இருந்த மோட்டார் திடீரென இயங்காமல் நின்றுவிட்டது. இதனால் அணை உடைந்த பகுதியை அவர்கள் கடந்தபோது தண்ணீரின் வேகத்தால் படகு கவிழந்தது. இதில் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் இருவரும், தண்ணீரில் நீச்சல் அடித்து அங்குள்ள கான்கிரீட் கட்டையில் ஏறி நின்று கொண்டனர். இதையடுத்து மற்ற தீயணைப்புப்படை வீரர்கள் நாட்டுப்படகில் கயிறு கட்டி அதன் மூலம் 2 பேரையும் மீட்டனர். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கிய ரப்பர் படகை மீட்க முயற்சித்து வருகிறார்கள். இந்தநிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 25 பேர் நேற்று திருச்சி முக்கொம்புக்கு வந்து மதகுகள் சீரமைக்கும் பணியை பார்வையிட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com