புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்

புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என புதுக்கோட்டையில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் துரைமாணிக்கம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செங்கோடன் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேளாண்துறையை மாநில அரசின் பட்டியலில் இருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்லும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இதை மாநில அரசு தடுக்க வேண்டும்.

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது. தமிழகத்தில் 3 வேளாண் ஆராய்ச்சி மையத்தை வேறு நிறுவனங்களோடு இணைக்க கூடாது. புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 40 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் போராடி வரும் நிலையில், தற்போது கோதாவரி இணைப்பு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என மத்திய மந்திரி நிதின்கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. நிலத்தடி நீரை கடுமையாக உறிஞ்சும் தைலமரங்களை விவசாயிகள் வளர்ப்பதற்கு அரசு ஊக்குவிக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com