கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்

கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்
Published on

திருக்காட்டுப்பள்ளி,

கல்லணையில் இருந்து புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய் பிரிந்து செல்கிறது. கல்லணைக்கால்வாயில் அதிகபட்ச அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதில்லை. இதனால் கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

கல்லணைக்கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்றடையாததன் காரணம் என்ன? என்பது பற்றி பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் கல்லணைக்கு வெகு அருகே உள்ள கல்லணைக்கால்வாய் தலைப்பில் உருவாகும் மணல் திட்டுகள், தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடைவதில் சிரமத்தை ஏற்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் மிதவை எந்திரங்களின் உதவியுடன் கல்லணைக்கால்வாயில் பொக்லின் எந்திரங்களை இறக்கி மணல் திட்டுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக தண்ணீர் ஓட்டம் ஓரளவுக்கு சீரானது.

இந்த நிலையில் கல்லணைக்கால்வாய் தலைப்பில் மணல் திட்டுகள் மீண்டும் உருவானது. இதை அறிந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரேவதி ஆகியோர் மணல் திட்டுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி பொக்லின் எந்திரங்கள் மூலம் மணல் திட்டுகளை அகற்றும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகளை பார்வையிடுவதற்காக கல்லணைக்கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற் பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர் சுந்தர் ஆகியோர் கல்லணையில் முகாமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com