திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு நடத்தினார்.
திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
Published on

சேவூர்,

சேவூர் அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வந்த பாப்பாள் (வயது 42) தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக சேவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 87 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்பாள் சமைத்த சத்துணவில் பல்லி கிடந்ததாக, கூறி மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் கவனக்குறைவால் சத்துணவு சமைத்ததாக பாப்பாள் மீது தலைமை ஆசிரியையும், இதையடுத்து பொய் புகார் கொடுத்ததாக தலைமை ஆசிரியை மீது பாப்பாளும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் திருமலைக்கவுண்டன்பாளையத்தில் நாளுக்கு நாள் பிரச்சினை வலுத்து வந்தது.

இந்த நிலையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சப்-கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளிக்கு திடீரென்று சென்றார். பின்னர் அங்குள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள மக்களிடமும் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். சிறிது நேரம் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com