

திருவண்ணாமலை,
தமிழ் மாதங்களில் சூரியன் வடக்கு திசை நோக்கி நகரும் காலமான தை மாதம் வரும் அமாவாசை, சூரியன் தென்திசை நோக்கி நகரும் காலமான ஆடி மாதம் வரும் அமாவாசை மூதாதையர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் சூரியன் கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த அமாவாசையை மகாளய அமாவாசை என்பார்கள்.
இந்த நிலையில் நேற்று மகாளய அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
போளூரில் உள்ள பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், காஞ்சி சங்கர வேத பாடசாலை ஆகிய இடங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு பெரியமலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் வளாகம், பெரியகொழப்பலூர் திருக்குராஈஸ்வரர் கோவில் வளாகம், நெடுங்குணம் தீர்க்காஜல ஈஸ்வரர் கோவில் வளாகம், தேசூர் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகம், ரேணுகாம்பாள் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் சிவாச்சாரியார்களிடம் முன்னோர்கள் பெயரில் தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அதேபோல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் ஏராளமான மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.