

சென்னை,
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு உள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் பாதாள சாக்கடை அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் போக்குவரத்து சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றப்படுவதால் நெரிசல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக, போலீசார் போக்குவரத்தை முழுவீச்சில் ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். இதில் வேப்பேரி, பெரியமேடு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெரியமேடு போக்குவரத்து போலீஸ்காரர் ராஜேஷ், மிடுக்கான போலீஸ் உடையில் கொஞ்சமும் சளைக்காமல் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்து கிறார்.
அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான செய்கைகள் மூலம் சிரித்த முகத்துடன் பணியை மேற்கொள்ளும் அவர், வாகன ஓட்டிகளை திறம்பட கையாள்கிறார். இவருடைய இந்த பணியை சில வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கைகுலுக்கி பாராட்டி செல்கின்றனர்.
இதுகுறித்து போலீஸ்காரர் ராஜேஷ் கூறும்போது, போலீஸ் வேலையை 15 ஆண்டுகளாக செய்து வருகிறேன். சிரித்த முகத்துடன் பணியை செய்யும் போது, நமக்கும் மன அழுத்தம் இருக்காது, வாகன ஓட்டிகளும் அதை விரும்புகிறார்கள். வித்தியாசமான செய்கைகளை தினமும் வீட்டில் செய்து பார்த்து, அதை பணியில் செய்கிறேன். சாலையில் சிலர் வாகனங்கள் வருவதை கவனிக்காமல் கடக்கும்போது, அவர்களை மட்டும் ஏய் என்று கூறி எச்சரிப்பேன். அப்போது தான் அவர்கள் உடனே கவனிப்பார்கள். மற்றபடி இன்முகத்துடன் தான் பணியை தொடருகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.