கணவரை பயமுறுத்துவதற்காக விஷம் குடித்த பெண் பரிதாப சாவு

கணவருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரை பயமுறுத்துவதற்காக விஷம் தின்ற பெண், பரிதாபமாகச் செத்தார்.
கணவரை பயமுறுத்துவதற்காக விஷம் குடித்த பெண் பரிதாப சாவு
Published on

திருபுவனை,

கலிதீர்த்தாள்குப்பம் வி.வி.நகரை சேர்ந்தவர் அய்யனார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அய்யனார் சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அய்யனாருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அதேபோல் கடன் பிரச்சினை தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பழனியம்மாள் கணவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்றார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அய்யனாரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் சேர்ந்து பழனியம்மாளை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் பழனியம்மாள் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு பழனியம்மாள் பரிதாபமாகச் செத்தார். இது குறித்து புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com